தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 december 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33

மூதூரில் படுகொலை செய்யப்பட்ட செல்வன், அகிலன்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32

புளொட்டின் அராஜகவாதிகளை நேரடியாக முகம் கொடுப்பதற்குத் தயாரானோம்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31

புளொட்டின் அராஜகங்களுக்கு துணை போன "இடதுசாரிகள்"

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30

எமக்கு பாதுகாப்பளிக்க முன்வந்த தமிழீழ விடுதலை இயக்கம்(TELO)

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29

புளொட்டின் அராஜகங்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்த மக்கள்

zaterdag 29 oktober 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28

இயந்திரத்துப்பாக்கியுடன் கொலைவெறியில் தெருத்தெருவாக அலைந்துதிரிந்த எஸ்.ஆர். சிவராம்

donderdag 27 oktober 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

புளொட்டின் சதிவலைக்குள் சிக்கிய ரீட்டா
மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் போல் நண்பர் தாசன் அவர்களின் வீட்டுக்குள் எமது தலைமறைவு வாழ்க்கையை ஆரம்பித்தோம். ஆனால் எமக்கு மரணதண்டனைக்கான திகதியோ, நேரமோ அன்றி இடமோ நிச்சயிக்கப்படவில்லை. எந்த நேரத்திலும் தலைமையின் - உமாமகேஸ்வரனின் - உத்தரவின் பேரில் நாம் கொல்லப்படலாம் என்ற நிலையே இருந்தது. நாம் ஒவ்வொருவரும் எமக்கு வரவிருக்கும் கொடிய ஆபத்தை நன்கு உணர்ந்து கொண்டவர்களாக இருந்தோம். இந்த ஆபத்தானது இப்பொழுது இலங்கை அரசபடைகளிடமிருந்தல்ல, ஈழ விடுதலைப் போராட்டத்தை புரட்சிகரமான பாதையில் முன்னெடுக்கும் ஒரே தலைமை என்று கூறி நாமே வளர்த்துவிட்டிருந்த தலைமையால் வரப்போகும் கொடிய ஆபத்தாக இருந்தது. நாம் ஒருவரை ஒருவர் அனுதாபத்துடனும், வரவிருக்கும் எதிர்காலம் எவ்வளவு கொடியதாக இருக்குமோ என்ற ஒருவித கலக்கத்துடனும், அனைத்துமே எம்மிடமிருந்து அந்நியமாகிக் கொண்டிருக்கின்றன என்ற நம்பிக்கையீனத்துடனும் ஒருவரை ஒருவர் உற்று நோக்கினோம்.


சிறிதுநேர நிசப்தம் கலைந்து ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினோம். அடுத்தது என்ன என்பதே எம் எல்லோரிடமிருந்தும் எழும்பிய கேள்வியாக இருந்தது. நண்பர் தாசன் அவர்களின் உறுதிமொழிக்கமைய இந்தியா செல்வதற்கு காத்திருப்பதை தவிர வேறுவழி எதுவும் எம்முன் இருந்திருக்கவில்லை. ஆனால் இந்தியாவுக்கான கடல்மார்க்கப் பயணம் என்பது, அதுவும் தூரவிசைப்படகல்லாத மீன்பிடிப் படகுகளில் செல்வதும் கூட பெரும் ஆபத்து நிறைந்தொன்றானதாக மாறிவிட்டிருந்தது. ஏனெனில் இலங்கைக் கடற்படையினர் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இலங்கைக் கடற்பரப்பில் தமது ரோந்தை அதிகரித்து ஈழவிடுதலைப் போராளிகளை குறிவைத்துச் செயற்பட்டு வந்தனர். அத்துடன் கடற்பயணத்திற்கு காலநிலையும்கூட சாதகமாக அமைந்தாக வேண்டியிருந்தது.

நண்பர் தாசனும் அவர் மனைவியும் எதுவுமே தவறாக நடந்துவிடவில்லை என்பது போன்றதொரு பார்வை மேலிட்டவாறு இரவு உணவுடன் எம்முன் வந்துநின்றனர். இப்பொழுது இந்த உணவானது நாம் ஈழவிடுதலைப் போராட்டத்துக்காக போராடும் போராளிகள் என்பதற்காக கொடுக்கப்படும் உணவாக இருக்கவில்லை. வெறுமனவே நட்பின் அடிப்படையின்பாலானதாக, மனிதாபிமானத்தின்பாலானதாக கொடுக்கப்படும் உணவாக மட்டுமே இருந்தது. ஏனெனில், ஈழவிடுதலைப் போராட்டத்துக்காக போராடப் புறப்பட்ட நாம் எத்தகைய பிற்போக்குதனம் மிக்க தலைமையை வளர்த்து விட்டிருந்தோம் என்பதோடு, அந்த தலைமை ஈழ விடுதலையின் பேரால் அமைப்புக்குள் எத்தகைய அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டிருந்தது என்பதையும் விபுலும், தர்மலிங்கமும் தெளிவாகவே நண்பர் தாசனுக்கு எடுத்துக் கூறியிருந்தனர்.
காலையின் இளங்காற்று யன்னல் வழியே புகுந்து கதகதப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. கதிரவனின் எழுச்சி இயற்கை என்றும் போலவே இயங்கிக் கொண்டிருப்பதையும் அனைத்தையுமே மாற்றத்துக்குட்பட்டுக் கொண்டிருப்பதையும் உறுதிப்படுத்திய வண்ணமிருந்தது. ஆனால் இப்பொழுது நாம் புளொட் என்ற அமைப்பில் இல்லை. எமக்கெனப் பொறுப்புகளோ, நாம் செய்வதற்கு கடமைகளோ இருக்கவில்லை. புளொட்டின் தலைமையினுடைய தவறான போக்குகளையும், அதற்கு புளொட்டின் தலைமை கொடுக்கும் உண்மைக்குப் புறம்பான விளக்கங்களையும் நாம் மாவட்ட அமைப்பாளர்களுக்கோ, கீழணி உறுப்பினர்களுக்கோ அல்லது மக்களுக்கோ கிளிப்பிள்ளை போல் ஒப்புவித்துக் கொண்டிருக்கவில்லை என்ற திருப்தி ஏற்பட்டது. புளொட்டின் இராணுவப் பிரிவினருடன் அன்றாடம் தேவையற்ற முரண்பாடுகள் இனிமேலும் இருக்கப் போவதில்லை என்பதையிட்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. தவறான அமைப்பில் இருந்து ஒதுங்கிவிடுவது, தவறான அமைப்பையும் அதன் கருத்துக்களையும் அம்பலப்படுத்தி சரியான ஒரு கருத்துக்காகப் போராடுவது என்பதே எமது ஒரே நோக்கமாக இருந்தது. ஆனால் நிலைமைகள் எதுவுமே நாம் எதிர்பார்த்தது போல் அமைந்துவிடவில்லை.
நாம் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவான விடயம் மிகவேகமாக புளொட்டுக்குள் வெளிவரத் தொடங்கியது. உமாமகேஸ்வரனால் வேண்டப்பட்டிருந்த ஜீவன், விபுல், சிவானந்தி உட்பட நாம் எல்லோரும் தலைமறைவான விடயம் உமாமகேஸ்வரனுக்கும் அவரைச் சுற்றியிருந்த தலைமைக்கும் மட்டுமின்றி புளொட்டில் உளசுத்தியுடனும், தன்னலமற்றும் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாம் எதற்காக புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவானோம் என்பது உமாமகேஸ்வரனுக்கு தெரியவாய்ப்பிருந்தபோதும் புளொட்டில் செயற்பட்டுக் கொண்டிருந்த பெரும்பாலானவர்களுக்கு நாம் ஏன் தலைமறைவானோம் என தெரிய வாய்ப்பிருக்கவில்லை. நாம் புளொட் என்ற அமைப்புடன் இனிமேலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் என்னால் கையளிக்கப்பட்டிருந்த புளொட்டின் ஆவணங்கள் அனைத்தையும் கொக்குவிலைச் சேர்ந்த ஆனந்தன் சின்னமென்டிஸிடம் கையளித்திருந்தார். "நேசன் எங்கே?" என்ற சின்னமென்டிஸின் கேள்விக்கு பதிலளித்த ஆனந்தன் "இவை அனைத்தையும் உங்களிடம் கையளிக்கும்படி நேசன் கூறினார், எனக்கு வேறு எதுவும் தெரியாது" என்று பதிலளித்து விட்டு திரும்பி விட்டார்.
இந்தியாவில் மத்தியகுழுக் கூட்டத்தின் பின் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களால் தனது எதிர்காலம் குறித்தும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் தனது தலைமைப் பாத்திரம் குறித்தும் எழுந்த கேள்விகளுடன் கொலைவெறியுடன் தூக்கமின்றி அலைந்த உமாமகேஸ்வரனுக்கும் அவரது உளவுப்படைக்கும் தளத்தில் நாமும் புளொட்டிலிருந்து வெளியேறிவிட்டிருந்தது பேரதிர்ச்சிதான். சந்ததியார் தலைமையில் வெளியேறிய கண்ணாடிச்சந்திரன் விரைந்து செயற்பட்டு NLFT மத்தியகுழு உறுப்பினர் விசுவானந்ததேவன் மூலம் விபுலுக்கு அனுப்பிவைத்திருந்த கடிதமும் கூட உமாமகேஸ்வரனின் தலைமையையிட்டு நாம் விழிப்படைந்ததற்கு ஒரு காரணம் என்று அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்.
சந்ததியாரின் தலைமையில் இந்தியாவில் மத்தியகுழு உறுப்பினர்கள் புளொட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து, மக்களமைப்பைச் சேர்ந்தவர்களில் "சந்ததியாரின் ஆட்கள்" என்று உமாமகேஸ்வரன் சந்தேகிப்பவர்களை கண்காணிப்பதற்கு தனது உளவுப்படையை தளத்துக்கு விஸ்தரித்திருந்தார். உமாமகேஸ்வரனின் பணிப்பின் பேரில் தளத்தில் இத்தகையதொரு உளவுப்படை செயற்பட்டுக் கொண்டிருந்ததை நாம் வெளியேறும் இறுதிவரை அறிந்திருக்கவில்லை.
இந்த உளவுப்படையில் மகளிர் அமைப்பைச் சேர்ந்த ஒரு சிறுபகுதியினரும், இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும், மாணவர் அமைப்பினைச் சேர்ந்தவர்களில் ஒரு சிறுபகுதியினரும், "SR" என்றழைக்கப்பட்ட சிவராமை தலைமையாகக் கொண்டு சிவராமைச் சுற்றி அணிதிரண்டவர்களில் ஒரு பகுதியினரும் அமர்த்தப்பட்டிருந்தனர். இதில் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவரும் சின்னமென்ஸுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தவருமான சத்தியா மற்றும், ரீட்டா, சுந்தரி போன்றோரும் புளொட்டின் உளவுப்படையினரால் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தனர். நாம் சந்திப்புக்களை மேற்கொள்ளும் இடமான திருநெல்வேலி சனசமூக நிலையத்துக்கு முன் சத்தியா வந்துசெல்வதும், நிற்பதும் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் சத்தியாவை சந்தித்துச் செல்வதும் மக்கள் அமைப்பைச் சேர்ந்த எம்மை உளவுபார்ப்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டிருந்தது. நாம் தலைமறைவாவதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட விஜயன், பாண்டி, மைக்கல் ஆகியோரைச் சந்தித்து இந்தியாவிலுள்ள நிலைமைகள் பற்றி பேசவிரும்புவதாக கூறிய மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் திருநெல்வேலியிலிருந்த சுந்தரியின் வீட்டில் அதற்கான சந்திப்பை ஒழுங்கு செய்திருந்தனர். சத்தியா, ரீட்டா, சுந்தரி உட்பட பல மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட அந்தச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பாண்டி புளொட்டின் தலைமையை கடுமையாக விமர்சனம் செய்திருந்ததோடு, இந்தியாவில் பயிற்சிமுகாம்கள் சித்திரவதை முகாம்களாக மாறிவிட்டிருந்தது குறித்தும், உடுவில் சிவனேஸ்வரன் உட்பட அகிலன், பவான் ஆகியோர் கொல்லப்பட்டது குறித்தும், சந்ததியார் புளொட்டுடன் உறவை முறித்துக் கொண்டது பற்றியும், உமாமகேஸ்வரனினதும் அவரினால் வழிநடத்தப்படும் உளவுப்படையின் கொலைவெறித்தனங்களையும் கூட அனைவருக்கும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்து விட்டிருந்தார். இவை அனைத்தையும் தனது ஒலிப்பதிவு நாடாவில் இரகசியமாக பதிவு செய்துவிட்டிருந்த சத்தியா அந்த ஒலிப்பதிவு நாடாவை மென்டிஸிடம் கொடுத்து விட்டிருந்தார். இதேபோல் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினரும், சிவராமும், சிவராமைச் சுற்றி அணிதிரண்டிருந்தவர்களில் ஒரு பகுதியினரும், மக்கள் அமைப்பைச் சேர்ந்த "சந்ததியாரின் ஆட்களை" உளவு பார்ப்பதில் முன்னணி வகித்தனர். மேற்கு ஜரோப்பாவில் வசிப்பவரும், சிவராமுக்கு மிகவும் நெருக்கமானவரும், புளொட்டில் அரசியல் பாசறைகளில் வகுப்புகளை நடத்தியவருமான ஒருவர் பின்நாட்களில் என்னுடன் பேசும்போது "உங்களை நாங்கள் உளவு பார்த்தோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய அனைத்து உளவுவேலைகளையும் தளத்தில் திட்டமிட்டுச் செய்த உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்படையும் விடுதலைப் போராட்டத்துக்கென முன்வந்து புளொட்டுடன் இணைந்தவர்களை தவறான பாதையில் இட்டுச் சென்று கொண்டிருந்தனர். முப்பத்தைந்து இலட்சம் மக்களுக்கு தலைமை தாங்குவதற்கான அனைத்து தகுதியும் தன்னிடத்தே உள்ளதென இறுமாப்புடன் நம்பியிருந்த உமாமகேஸ்வரன் ஜீவன், விபுல், சிவானந்தி ஆகிய மூவரையும் இந்தியா கொண்டு சென்று சித்திரவதை செய்து கொலை செய்யும் திட்டத்தில் தான் தோற்றுப் போய்விட்டதாகக் கருதியதும் புளொட்டிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்த எம்மை கைதுசெய்யும்படியும் அல்லது கைது செய்து கொலை செய்யும்படியும் உத்தரவுகளையும் ஆலோசனைகளையும் சின்னமென்டிஸுக்கு அனுப்பியதில் வியப்பேதுமில்லை.
ஆனால் தளத்தில் விடயங்களை கையாளுவது எப்படி? எம்மை கைது செய்வது எப்படி? எத்தகைய காரணக்களை முன்வைத்து கொலை செய்வது? என்பனவெல்லாம் உமாமகேஸ்வரனினதும் அவரது உளவுப்படையினதும் முன்னுள்ள கேள்விகளாக இருந்தன. புளொட்டின் பணத்தை கையாடி தலைமறைவாகி விட்டோம் என எம்மீது குற்றம் சுமத்தினர். புளொட்டின் ஆயுதங்களுடன் தலைமறைவாகிவிட்டோம் என்று எம்மீது குற்றம் சுமத்தினர். மகளீர் அமைப்பை சேர்ந்த ரீட்டாவை பலாத்காரம் செய்து விட்டோம் என்று எம்மீது குற்றம் சுமத்தினர். ஒட்டுமொத்தத்தில் நாம் புளொட்டில் இருந்து வெளியேறும் உரிமையை மறுத்ததுடன் மேற்படி உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை எம்மீது சுமத்துவதன் மூலம் எம்மை அழித்தொழிப்பதே உமாமகேஸ்வரனினதும் அவரது கொலைகார கும்பலினதும் ஒரே நோக்கமாக இருந்தது. எம்மைப் பற்றிய உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை புளொட்டுக்குள்ளும் மக்கள் மத்தியிலும் எடுத்து சென்றனர். புளொட்டுக்குள் ஒரு பகுதியினர் எம்மைப் பற்றிய குற்றச்சாட்டுகள் எதையும் நம்பமுடியாதவர்களாக விக்கித்து நின்றனர். இன்னொரு பகுதியினரோ எம்மீதான குற்றச்சாட்டுகளை மேலும் பெரிதுபடுத்தி தாம் உமாமகேஸ்வரனுக்கு மிகவிசுவாசமானவர்களாக, நம்பிக்கையானவர்களாக காட்ட முற்பட்டதோடு அமைப்பில் தாம் முன்னணிக்கு வர தம்மாலான அனைத்தையும் செய்தனர். புளொட்டின் பணத்தை கையாடிக் கொண்டு தலைமறைவாகி விட்டோம் என்று எம்மீது குற்றம் சுமத்தி இருந்தனர்: தளத்தை பொறுத்தவரை புளொட்டின் "நிதிவளம்" என்பது மட்டுப்படுத்தப்பட்டதொன்றாகவே இருந்து வந்தது. மக்களிடம் இருந்தே நாம் பணத்தை சேகரித்து வந்தோம். அவற்றிற்கான பற்றுச்சீட்டுகளும்கூட வழங்கப்பட்டு வந்தன. எமக்கான உணவுத்தேவைக்கு பெருமளவுக்கு மக்களையே சார்ந்திருந்தோம். நாம் புலத்தில் இருந்து வெளியேறி தலைமறைவாகும் போது பணம் சேகரிப்பதற்கான பற்றுச்சீட்டுகள், மற்றும் பணத்திற்கான கணக்குகள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தையும் ஆனந்தனூடாக சின்னமென்டிஸிடம் கையளித்திருந்தோம்.
புளொட்டின் ஆயுதங்களுடன் தலைமறைவாகிவிட்டோம் என்று எம்மில் குற்றம் சுமர்த்தி இருந்தனர்: புளொட்டின் படைத்துறை பொறுப்பாளராக பார்த்தன் செயற்பட்ட காலகட்டத்திலும், பார்த்தனின் மரணத்தின் பின் இராணுவப் பொறுப்பை தற்காலிகமாக கண்ணாடிச்சந்திரன் பொறுப்பெடுத்திருந்த காலகட்டத்திலும் புளொட்டினது இராணுவப்பிரிவு மக்களமைப்பை சார்ந்தும் மக்களமைப்புடன் பரஸ்பரம் இணைந்தும் செயற்பட்டு வந்தது. இந்தியாவில் இருந்து படைத்துறைச் செயலர் கண்ணனின் வருகையும், அதனைத் தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி முடித்து தளம் வந்தவர்களை இராணுவப் பொறுப்பாளர்களாக நியமித்ததன் பின்னான காலகட்டத்திலிருந்து இராணுவப்பிரிவும் அரசியல் பிரிவும் பல்வேறுபட்ட முரண்பாடுகளுடன் வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருந்தன. எனவே மக்கள் அமைப்பை சேர்ந்த நாம் எடுத்து செல்வதற்கு ஆயுதங்கள் எதுவும் எம்மிடம் இருந்திருக்கவில்லை.
மகளீர் அமைப்பை சேர்ந்த ரீட்டாவை பலாத்காரம் செய்தோம் என்று குற்றம் சுமத்தியிருந்தனர்:
புளொட் மகளீர் அமைப்பில் மிகவும் துடிப்புடன் செயற்பட்டவர்களில் ஒருவரான ரீட்டா புளொட்டின் தலைமையால் தவறாக வழிநடத்தப்பட்டவர்களில் ஒருவர். உமாமகேஸ்வரனின் "தலைமைக்கு எதிரானவர்கள்" அல்லது "சந்ததியாரின் ஆட்கள்" என முத்திரை குத்தப்பட்ட எம்மை உளவுபார்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட சிலரில் இளவயதினை உடையவரான ரீட்டாவும் ஒருவராக காணப்பட்டார். விபுலின் மிக நெருங்கிய நண்பனான ரீட்டாவின் சகோதரன் உட்பட ரீட்டாவினது குடும்பம் புளொட்டின் வளர்ச்சிக்கு பல வழிகளிலும் உதவி புரிந்திருந்தனர். ரீட்டாவின் சகோதரி கூட இந்தியாவுக்கு இராணுவப் பயிற்சிக்கென சென்றிருந்தார். நாம் புளொட்டில் இருந்து வெளியேறி நண்பர் தாசன் வீட்டில் தலைமறைவாக இருந்தபோதுதான் ரீட்டா மீதான பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்பட்டதாக கொலைவெறியுடன் அலைந்து திரிந்த இராணுவப் பிரிவினரின் ஒரு பகுதியினரால் எம்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. விடுதலைப் போராட்டம் என்று கூறி தமது அமைப்பில் செயற்பட்டவர்களையே உளவு பார்த்தவர்கள், விடுதலைப் போராட்டத்துக்கென தியாகமனப்பான்மையுடன் இந்தியாவுக்கு பயிற்சிக்கு சென்ற தமது சொந்த தோழர்களையே பயிற்சிமுகாம்களில் சித்திரவதை செய்து கொன்று புதைத்தவர்கள், மக்கள் அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை இந்தியாவுக்கு பொறுப்புக்களை பகிர்ந்தெடுக்க வரும்படி அழைத்து, சித்திரவதை செய்து கொலை செய்ய திட்டமிட்டிருந்தவர்கள், தனது இளவயதிலேயே விடுதலைப் போராட்டத்துக்கென புளொட்டுடன் இணைந்து கொண்ட பெண் ஒருவரை தமது சதித்திட்டத்துக்கு பலியாக்கிவிட்டதில் நாம் வியப்பதற்கு எதுவுமில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஆறு இளைஞர்களை சுழிபுரத்தில் படுகொலை செய்துவிட்டு அதை தமிழீழ விடுதலைப் புலிகளின் சதிவேலை என்று கூறியவர்கள், தமிழீழ விடுதலை இராணுவத்தை(TELA) உட்சதிகள் மூலம் அழித்தொழித்தவர்கள், நீண்டகாலமாக புளொட்டின் வளர்ச்சிக்காக உழைத்த உடுவில் சிவனேஸ்வரன் உட்பட சுன்னாகம் அகிலன், பவான், சதீஸ், சின்னத்தம்பி ஆகியோரையும் ஈழ விடுதலை போராட்டத்துக்காக புளொட்டை நம்பி இந்தியாவிற்கு பயிற்சிக்கென சென்ற பல இளைஞர்களையும் தமது சொந்த பயிற்சிமுகாம்களிலேயே சித்திரவதை செய்து கொன்றொழித்தவர்கள், ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரை கொன்றொழிக்க சதித் திட்டம் தீட்டியவர்கள் என்ற நீண்டபட்டியலின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட உமாமகேஸ்வரனின் திட்டமிட்ட சதியே ரீட்டா மீதான பாலியல் பலாத்காரம் என்கின்ற விவகாரமாகும்.
எம்மீதான உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளுடன் புளொட்டின் இராணுவப்பிரிவைச் சேர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் எம்மை வேட்டையாடத் தயாராகினர். தளத்தில் எம்மை உளவு பார்ப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட உளவுப்படை அதன் தீவிர நடவடிக்கையில் இறங்கியது.
நாம் தலைமறைவாகி இருக்கும் இடம் பற்றிய தகவல் அறிய ஒரு வகை வெறியுடன் யாழ்ப்பாணம் எங்கும் அலைந்து திரிந்தனர். நாம் நண்பர் தாசனின் வீட்டில் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக்கிடந்தோம். புளொட்டில் இருந்து விலகிச் செல்வதற்கான எமது உரிமையை மறுத்தமை, எம்மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரச்சாரம் செய்தமை என்பன எம்மை இக்குற்றச் சாட்டுகளுக்கெதிராக வீரியத்துடன் செயற்படுமாறு தூண்டியது. நாம் இந்தியா செல்வது குறித்த விடயத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. இதனால் எமக்கு நம்பிக்கையானவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி எமது நிலையை தெளிவு படுத்துவது என்றும் அதேவேளை அவர்களிடத்திலிருந்து எமது பாதுகாப்பிற்கு உதவியும் பெறமுயன்றோம். புளொட்டினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த எம்மைப் பற்றிய உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டு யாழ் நகர்ப்பகுதிகளில் சுவரொட்டிகளை ஓட்டுவது எனவும் முடிவெடுத்தோம்.

donderdag 20 oktober 2011

zondag 17 juli 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

"சமூகவிரோதி"களும் மரணதண்டனையும்
ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அவர்களின் ஆரம்பகாலங்களிலேயே "சமூக விரோதிகள்" என்ற சொல்லை உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர். சமூகத்தில் சிறுகளவுகளில் ஈடுபடுவோர், கொள்ளைகளில் ஈடுபடுவோர், தெருச்சண்டியர்கள், விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவோர் போன்றோரை "சமூகவிரோதிகள்" என அழைக்கத் தொடங்கினர். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டனர் அல்லது மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இத்தகைய செயலை மிகச் சிறிய அமைப்பாக இருந்த தமிழீழ விடுதலை இராணுவம்(TELA) உட்பட புளொட், தமிழீழ விடுதலைப் புலிகள் வரை மேற்கொண்டனர்.



ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஆரம்பகாலங்களிலேயே இயக்கங்களுக்குள் தோன்றி வளர்ந்த "சமூகவிரோதி" என்ற பார்வையும் "சமூகவிரோதி" ஒழிப்பு நடவடிக்கைகளும் 1983 யூலைக்குப் பின்னான இயக்கங்களின் வளர்ச்சியையொட்டி தீவிர நடைமுறைவடிவம் பெற்றது. "சமூகவிரோதி" என ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களால் இனம் காணப்பட்டவர்கள் பெரும்பாலும் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். குடும்பவறுமை காரணமாக, ஒருவேளை உணவுக்காக திருட்டுக்களில் ஈடுபட்டவர்கள் கூட ஈவிரக்கமின்றி மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இந்த "சமூகவிரோதி" ஒழிப்பானது சில சமயங்களில் ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்களில் அங்கம் வகித்தவர்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பின்பாலானதாகவும் தனிப்பட்ட சமுதாய, சாதிய குரோதங்களின் பாலானதாகவும், தனிநபர் பழிவாங்கல்களாகவும் இருந்துள்ளது என்பது மற்றொரு உண்மையாகும்.
புளொட் இந்தச் "சமூகவிரோதிகள்" ஒழிப்பு நடவடிக்கையில் ஆரம்பகாலங்களிலிருந்தே ஈடுபட்டு வந்தது. புளொட் சிறுகுழு வடிவில் இருந்த ஆரம்பகாலங்களிலேயே இத்தகைய "சமூகவிரோதி" ஒழிப்புக்கள் ஒரு சிலரின் முடிவாக இருந்து வந்தது. புளொட்டால் மரணதண்டனை வழங்கப்பட்டவர்கள் மேல் சில சமயங்களில் தவறான அல்லது உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. தனிப்பட்ட குரோதங்கள் தீர்த்துக் கொள்ளப்பட்டன.
சுழிபுரத்தைச் சேர்ந்த சிவனடியார் மகாலிங்கம் என்பவரை புளொட்டின் சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்கள் "சமூகவிரோதி" எனச் சுட்டுக் கொன்றனர். ஆனால், பிற்காலத்தில் அதே சுந்தரம் படைப்பிரிவினரைச் சேர்ந்தவர்கள் இக்கொலை பற்றித் தெரிவிக்கையில் சிவனடியார் மகாலிங்கம் தன்னை விடச் சாதியில் மேலான புளாட் உறுப்பினரின் உறவினரான கணவனை இழந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்தமையாலேயே அவர் "சமூகவிரோதி" எனக் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணச் சமூகத்தில் புரையோடிப் போயிருந்த சாதியமைப்பு முறையின் தாக்கம் எந்தளவுக்கு விடுதலை அமைப்புகளுக்குள் செல்வாக்கு செலுத்தியது என்பதற்கு ஒரு உதாரணமாகும்.
சில சமயங்களில் சமூகவிரோதி என்ற பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை இயக்கங்களின் கொடூரமான விசாரணைகளின் போது இறந்த சம்பவங்களும் உண்டு.
புளொட்டை பொறுத்தவரை 1983 இறுதிவரை மேற்கொள்ளப்பட்ட "சமூகவிரோதி" ஒழிப்பு நடவடிக்கைகளை புளொட்டால் செய்யப்பட்டவை என உரிமை கோரியிருக்கவில்லை. புளொட் என உரிமைகோருமிடத்து புளொட்டுக்கெதிரான உணர்வலைகள், எதிர்ப்புக்கள் மக்கள் மத்தியிலிருந்து உருவாகும் என புளொட் தலைமையிலிருந்தவர்கள் எண்ணியிருந்தனர். இதனால் புளொட்டால் மேற்கொள்ளப்பட்ட "சமூகவிரோதி" ஒழிப்பு " சுந்தரம் படைப்பிரிவு", "காத்தான் படைப்பிரிவு", "சங்கிலியன் பஞ்சாயம்" போன்ற வெவ்வேறு பெயர்களில் உரிமை கோரப்பட்டு வந்தது.
1984 ம் ஆண்டிலிருந்து புளொட்டின் மக்களைப்பின் வளர்ச்சியுடன் நிலைமைகள் மாற்றமடையத் தொடங்கின. மாவட்ட அமைப்புக்களில் செயற்பட்டுவந்த அமைப்பாளர்கள் மக்கள் மத்தியில் செல்லும்போது முகம் கொடுக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக இந்தச் சமூகவிரோதிப் பிரச்சனைகள் இருந்தது. இதனால் அமைப்பாளர்கள் "சமூகவிரோதிகள்" குறித்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்பாளர் சந்திப்புக்களில் வேண்டுகோள் விடுத்தனர். கடந்தகாலங்களில் புளொட் "சமூகவிரோதிகள்" ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்திருந்ததால் நாமும் இந்த "சமூகவிரோதிகள்" ஒழிப்பில் முரண்பாடற்றவர்களாக இருந்தோம்.
ஆனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைப்புவடிவிலான செயற்பாடுகள் ஆரம்பித்த பின்னர் எந்தவிதமான முடிவாக இருந்தாலும் - மிகவும் மோசமான தவறான முடிவுகளாக இருந்தாலும் கூட - அந்த முடிவுகள் குழுமுடிவாக இருந்ததேயன்றி தனிப்பட்ட ஒருவருடையதாகவோ அல்லது ஒரு சிலரது முடிவாகவோ இருந்ததில்லை. அத்துடன் "சமூகவிரோதிகள்" ஒழிப்பாக இருந்தாலும் சரி ஏனைய நடவடிக்கையாக இருந்தாலும் சரி வெவ்வேறு பெயர்களில் உரிமை கோராமல் "தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்" என்றே உரிமை கோரினோம்.
"சமூகவிரோதிகள்" ஒழிப்பு: சமூகத்தைப்பற்றிய தவறான புரிதலின் வெளிப்பாடு
"சமூகவிரோதிகள்" பற்றிய பிரச்சனையை நாம் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பின், அதுவும் நிலப்பிரபுத்துவ தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாத, சமூக ஏற்றத்தாழ்வுகளினால் விளைந்ததொன்றாக நாம் பார்க்கத் தவறியிருந்தோம். அது மட்டுமல்லாது மிகவும் மோசமான சாதிய அமைப்பு முறையை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக அமைப்பின் குறைபாடாக, ஒரு சமூகப் பிரச்சனையாக பார்ப்பதற்கு தவறியிருந்தோம். "சமூகவிரோதிகள்" பற்றிய பிரச்சனை ஒரு வர்க்கபார்வையற்ற, சமுதாயத்தைப்பற்றிய சரியான புரிந்துணர்வற்றதொன்றாகவே காணப்பட்டது. சமூகத்தைப் பற்றிய தவறான புரிதலிலிருந்து, சமூகத்தைப் பற்றிய தவறான பார்வையிலிருந்து பிரச்சனைகள் அணுகப்பட்டன. சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த வறியமக்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருந்தனர். இவர்களது பின்தங்கிய சமூகநிலையிலிருந்து ஊற்றெடுக்கும் பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு (அவர்களையே போராளிகளாக மாற்றுவதற்குப் மாறாக) அவற்றை அணுகுவதற்கு மாறாக மேற்கொள்ளப்பட்ட "சமூகவிரோதிகள்" ஒழிப்பின் நேரடியான தாக்கத்தை சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட வறிய மக்களே முகம் கொடுக்க நேர்ந்தது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் "சமூக விரோதிகள்" என மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட வறியமக்களாக இருந்தார்கள் என்பதுதான் உண்மையானது.
இந்தச் "சமூக விரோதிகள்" ஒழிப்பில் சில சமயங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தோர் அல்லது குடும்ப உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். இது எத்தகைய தவறான, மிகவும் மோசமான முடிவுகளை நாம் எடுத்திருந்தோம் என்பதைக் காட்டுகிறது.
நாம் (புளொட்) ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடுவதாகக் கூறிக்கொண்டு இத்தகைய கொடூரமான செயற்பாடுகளில் ஈடுபட்டதானது எமது கருத்துக்களுக்கும் செயல்களுக்குமான முரண்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.
"தராக்கி" சிவராமை புளொட்டுக்குள் உள்வாங்கிய கண்ணாடிச்சந்திரன்
மத்தியகுழு உறுப்பினரான கண்ணாடிச்சந்திரனால் வெளியிடப்பட்ட உரிமைகோரும் துண்டுப்பிரசுரமும், அதனால் ஏற்பட்ட குழப்பங்களும் அமைப்புக்குள் விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பிக் கொண்டிருந்தன. இவற்றை மக்கள் மத்தியில் வேலை செய்துகொண்டிருந்த நாம் முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இதேகாலப் பகுதியில் புளொட்டின் தகவல் பிரிவில் ரமணனுடன் செயற்பட்ட கைதடியை சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தர்மலிங்கம், மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த அக்கரைப்பற்றை சேர்ந்த தர்மரத்தினம் சிவராம் என்பவர் புளொட்டில் இணைந்து செயற்பட விரும்புவதாக கண்ணாடிச்சந்திரனிடம் தெரிவித்தார்.
(தர்மரத்தினம் சிவராம் - தராக்கி)
சிவராமை கண்ணாடிச்சந்திரன் சந்தித்துப் பேசுவதற்கு தர்மலிங்கம் ஒழுங்குகளை மேற்கொண்டார். சிவராமை சந்தித்துப் பேசிய கண்ணாடிச்சந்திரன் சிவராமை புளொட்டில் இணைத்துக் கொள்ள உடன்பட்டார். நீண்ட நாட்களாக யாழ் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த தர்மரத்தினம் சிவராம் தன்னை ஏதாவது ஒரு இயக்கத்துடன் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். எந்த இயக்கமுமே சிவராமை உள்வாங்க முன்வராத நிலையில் இறுதியில் கண்ணாடிச்சந்திரன் மூலமாக புளொட்டுடன் தொடர்பை ஏற்படுத்தி புளொட்டுடன் இணையும் முயற்சியில் இறங்கினார். அவரின் முயற்சி வெற்றியடைந்தது.
(சிவராமால் படுகொலை செய்யப்பட்ட அகிலன் - செல்வன்)
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற தர்மரத்தினம் சிவராம் கண்ணாடிச்சந்திரனால் புளொட்டுக்குள் உள்வாங்கப்பட்டு சில நாட்களிலேயே யாழ் மாவட்டத்தில் மக்கள் அமைப்பில் செயற்பட்டு வந்தவர்களுக்கு அரசியல்வகுப்பு எடுக்கும்படி கண்ணாடிச்சந்திரனால் பணிக்கப்பட்டிருந்தார். தர்மரத்தினம் சிவராம் மார்க்சிய நூல்கள் உட்பட பல்வேறு நூல்களையும் கற்றறிந்தவராக இருந்த அதேவேளை பேச்சுவன்மையும் அவரிடம் காணப்பட்டது. சிவராமை அமைப்புக்குள் உள்வாங்கி சிலநாட்களுக்குள்ளாகவே அவரை புளொட் உறுப்பினர்களுக்கு அரசியல் வகுப்பெடுக்க அனுமதித்தது என்னைப் பொறுத்தவரை தவறானதொன்றாகவே உணரப்பட்டது. புளொட்டுக்குள் இராணுவப் பயிற்சிக்கென வந்தவர்கள் எல்லோரையுமே அவர்கள் பின்னணி என்னவென்று சரிவர ஆராயாது உடனேயே இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பியது போல, சிவராமின் பின்னணி என்ன என்று சரிவர தெரியாமலேயே புளொட்டுக்குள் உடனேயே இணைத்தது மட்டுமல்லாமல், அவரை அரசியல் வகுப்புக்கள் எடுக்குமாறும் கண்ணாடிச்சந்திரன் பணித்தது மிகவும் தவறானதொன்றாகும். மத்திய குழு உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கீழணி உறுப்பினர்கள் தட்டிக் கேட்கக்கூடிய நிலவரம் அப்போது புளொட்டில் இருக்காததால் கண்ணாடிச்சந்திரனுக்கு எனது முரண்பாட்டைத் தெரிவிக்க முடியவில்லை.
"எஸ் ஆர்" என்று புளொட்டில் அழைக்கப்பட்ட தர்மரத்தினம் சிவராம் தனது பேச்சுவன்மையாலும், கவர்ச்சிகரமான பேச்சாலும் புளொட்டுக்குள் ஒரு கூட்டத்தை தன்னைச் சுற்றி உருவாக்கி கொண்டிருந்தார். தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என பெருமையாக சொல்லிக்கொண்டு, சேகுவரா போல முகத்தில் தாடியுடனும், ஒரு அதீத சிந்தனையாளன் போன்ற முகபாவனைகளோடும், தர்மரத்தினம் சிவராம் அரசியல் வகுப்புக்களை எடுத்துவந்த வேளை, சிவராமால் சிலவேளைகளில் மறைக்க முடியாமல் போன அவரது சூழ்ச்சியே உருவான வஞ்சகமான பார்வைகளை சிலர் இனம் காணத் தவறவில்லை.
இந்தியாவில் பயிற்ச்சி முடித்த புளொட் இராணுவப் பிரிவை சேர்ந்தவர்கள் சிறு சிறு குழுக்களாக இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணம் திரும்பியவர்களுக்கு எந்தவிதமான வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை. கண்ணாடிச்சந்திரன் இவர்களுக்கு பொறுப்பாகவும் இவர்களது தேவைகளை கவனிக்க வேண்டியவராகவும் இருந்தார்.
தள நிர்வாகத்தை கவனித்தலுடன், இந்தியாவில் இருந்து பயிற்ச்சி முடித்து வந்தவர்களுடனான உறவுகளை பேணுதல் போன்ற வேலைப்பளுவும், இராணுவப் பயிற்ச்சி முடித்து வந்தவர்களின் எதிர்பார்ப்புகளை சரிவரப் பூர்த்திசெய்ய முடியாத நிலையும் இந்தியாவில் இருந்து பயிற்ச்சி முடித்து வந்தவர்களுக்கும் கண்ணாடிச்சந்திரனுக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்ற வழிகோலியது.
கூடவே கண்ணாடிச்சந்திரனிடம் காணப்பட்ட இயக்க உறுப்பினர்கள் மீதான "கடும் போக்கும்" பணம் சம்பந்தமான விடயங்களில் கண்ணாடிச்சந்திரன் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடான, கறாரான போக்கும் கூட (இது என்னைப் பொறுத்த வரையில் தூய்மைவாதமே) இந்தியாவில் இருந்து பயிற்சி பெற்று வந்தவர்களுக்கும், கண்ணாடிச்சந்திரனுக்கும் இடையிலான முரண்பாட்டுக்கு காரணமாக அமைந்தது.
தன்மேல் சுமத்தப்பட்டிருந்த தாங்க முடியாத வேலைப்பளுவை உணர்ந்து கொண்ட கண்ணாடிச்சந்திரன் சில வேலைகளை ஏனையவர்களுக்கு பகிர்ந்தளித்து தன் மேல் உள்ள வேலைப் பளுவை குறைக்க முன்வந்தார். "செய்தி மக்கள் தொடர்பு திணைக்களம்" என்றொரு பிரிவை ஏற்படுத்தி அதற்கு பொறுப்பாக திருநெல்வேலியை சேர்ந்த விபுல் என்பவரை நியமித்தார். விபுலின் கீழ் திருநெல்வேலி ஞானம், கோண்டாவில் சிறி போன்ற பலர் பணியாற்றினார். புளொட்டினது அனைத்து பிரச்சார ஏடுகள், பத்திரிகைகள் உட்பட அனைத்து மக்கள் தொடர்பு வெளியீடுகளையும், அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிப்பதே செய்தி மக்கள் தொடர்பு திணைக்களத்தின் பணியாக இருந்தது.
தளத்தில் நிதி சம்பந்தமான பணிகளுக்கு சிவானந்தியை நியமித்ததை அடுத்து, நிதி சம்பந்தமான விவகாரங்களை சிவானந்தி கவனித்து வந்தார்.
சாவகச்சேரி பகுதிக்கு அமைப்பாளராக செயற்பட்டு வந்த சிவானந்தி தளத்தின் நிதிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து, சாவகச்சேரியை சேர்ந்த அப்பன் என்பவர் சாவகச்சேரிக்கு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
தனது வேலைப்பளுவை குறைக்க, கண்ணாடிச்சந்திரன் பொறுப்புக்களை பகிர்ந்தளித்து கொடுத்த போதும்கூட தளத்தில் இருந்த மத்திய குழு உறுப்பினர்களான குமரனும் (பொன்னுத்துரை) கண்ணாடிச்சந்திரனுமே தளத்தில் அனைத்து செயட்பாடுகளையும் முடிவெடுத்து செயற்படுத்திக் கொண்டிருந்தனர்.
தொடரும்.

zaterdag 9 juli 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

maandag 27 juni 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10 மக்களமைப்பை பலமாகக் கட்டியெழுப்பும் முகமாக தொடர்ச்சியாக கிராமங்கள் தோறும் அரசியல் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. யாழ் மாவட்டத்தில் செயற்பட்ட அனைத்து உதவி அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களுமே இதற்காக கடுமையாக உழைத்து வந்தனர். புதிய அங்கத்தவர்களை அமைப்புடன் இணைத்தல், கிராமங்கள் தோறும் அமைப்பு கமிட்டிகளை உருவாக்குதல் என்று தொடர்ச்சியாக செயல்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. இத்தகைய அமைப்புக்களை உருவாக்குவதென்பது அவ்வளவு இலகுவாக நடைபெற்றிருக்கவில்லை. அரச படைகளின் தேடுதல் வேட்டைகளும், கெடுபிடிகளும், அன்றாட நிகழ்வாக இருந்த காலகட்டம் அது. அத்துடன் ஏனைய விடுதலை போராட்ட அமைப்புகளின் எதிர்ப்புகளும், சவால்களும் நாம் செல்லும் கிராமங்கள் தோறும் இருந்து வந்தது. இவற்றுக்கெல்லாம் முகம் கொடுத்த அதேவேளை, இத்தகைய எதிர்ப்புக்களையும், சவால்களையும் முறியடித்தே மக்கள் அமைப்பை உருவாக்க முடிந்தது.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2


இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் : ஆயுதப் போராட்டத்தை நோக்கி
70 களில் தமிழரசுக் கட்சியினதும் அதன் தொடர்ச்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் " உணர்ச்சி பொங்கும் " மேடைப் பேச்சுக்களிலும் "தமிழீழம்" என்ற கனவிலும் மூழ்கியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் நானுமொருவன் என்ற போதிலும், பின்னாட்களில் - 80 களில்- பாஸ்கரன், திலக் ஆகியோருடைய தொடர்புகளுக்கூடாக GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்து செயற்பட்டு வந்தேன்.
சந்திப்புகள், அரசியல் கருத்தரங்குகள், கண்டனக் கூட்டங்கள் என்பனவற்றோடு மாணவர் போராட்டங்களிலும் சாதீயத்திற்கெதிரான போராட்டங்களிலும் வெகுஜனமட்டத்தில் அவர்கள் செயற்பட்டுக் கொணடிருந்தனர். மாணவர்களை அணிதிரட்டுதல், மக்களை அணிதிரட்டுதல், அதனூடாக பரந்துபட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தல் என்பதாகவே GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இன் கொள்கை இருந்தது. இவர்கள் இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டவர்களாக, மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களாக காணப்பட்டனர். இடதுசாரித் தத்துவத்தின் மீதான அறிமுகம், அதன் மீதான ஆர்வம் எல்லாமே நான் GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்திருந்தபோது ஏற்பட்டவையே. இச்சூழல் 1981, 82 ம் ஆண்டுகளில் 1983 இனக்கலவரம் ஏற்படுத்திய உந்திய கொதிநிலைக்கு முற்பட்ட காலமாகும்.




திரு. அமிர்தலிங்கம் மங்கையற்கரசி தம்பதியர்-  திரு. அமிர்தலிங்கம்- எஸ்.ஜே.வி செல்வநாயகம்
ஆனால் அன்றைய யதார்த்தநிலையோ GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இனுடைய கொள்கைக்கு முரணானதாக காணப்பட்டது. கூர்மையடைந்து விட்டிருந்த இனமுரண்பாடு, அதனுடன் கூடவே ஆயுதப்படைகளின் கொடூர அடக்குமுறை என்பன ஒருபுறமும், ஆயுதப்படைகளுக்கெதிரான தாக்குதல்கள் (சிறிய அளவிலேனும்) அங்கும் இங்கும் மறுபுறமாக காணப்பட்டது. ஆயுதப்படைகளுக்கெதிரான தாக்குதல் சம்பவங்கள் அன்று மக்கள் மத்தியில் - குறிப்பாக என் போன்ற இளைஞர் மத்தியில் - "கவர்ச்சியூட்டுவதாக" இருந்ததோடு மட்டுமல்லாமல், முன்னரங்கிலும் இருந்தது என்பது தான் உண்மை. இந்தக் காலப்பகுதியில் எனது சகோதரன் காந்தீயம் புளொட் போன்ற அமைப்புகளில் செயற்பட்டுக் கொண்டிருந்தார். புளொட் உறுப்பினர்கள் எமது வீட்டை பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். இதனால் புளொட் உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே எனக்கு அறிமுகமானவர்களாக இருந்தனர். புளொட்டினுடைய தொடர்பு, அமைப்பு வடிவத்தில் இல்லையென்றபோதிலும் தனிநபர்கள் என்றளவில் இருந்து வந்தது. "புதியபாதை" பத்திரிகை "மக்கள் பாதை" சஞ்சிகை போன்றன வெளிவந்திருந்த போதும் கூட, புளொட் உறுப்பினர்கள் தம்மையொரு தலைமறைவு அமைப்பாகக் கருதி குறுகிய வட்டத்துக்குள் செயற்பட்டதாகவே என்னால் அன்று உணர முடிந்தது.
(சுந்தரம் என்ற சிவசண்முகமூர்த்தி புலிகளால் சித்திரா அச்சகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட "புதிய பாதை" யின் ஆசிரியர்)
1983 யூலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் திருநெல்வேலியில் இராணுவத்தின் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இத்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனஅழிப்பு, குருதியை உறையவைக்கும் வெலிக்கடைச் சிறைக்கைதிகள் படுகொலை, அரசபடைகள் நகரங்களில் மேற்கொண்ட படுகொலைகள், தென்னிலங்கையிலிருந்து கப்பல்களில் அகதிகளின் வருகை அனைத்துமே அரசுக்கெதிராக ஆயுதமேந்திப் போராட வேண்டுமென்ற உத்வேகத்தை எனக்குக் கொடுத்தது. ஆனால் நான் அன்று தொடர்புகளைப் பேணிவந்த GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) அமைப்போ முற்போக்கான கருத்துக்களைக் கொண்டிருந்த போதும் வெகுஜனமட்டத்தில் முற்போக்கான போராட்டத்தை முன்னெடுத்த போதும் இராணுவ ரீதியான செயற்பாடுகளில் பெருமளவுக்கு ஈடுபாடு இல்லாதவர்களாகவே காணப்பட்டனர். புளொட் அமைப்பை பொறுத்தவரை முற்போக்கான கருத்தை கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் இராணுவரீதியான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ஏற்கனவே எனக்கு அறிமுகமாகியிருந்த புளொட் உறுப்பினர் சத்தியமூர்த்தியின் தொடர்புக்கூடாக முழுநேரமாக புளொட்டில் செயற்பட ஆரம்பித்தேன். புளொட்டில் இணணயும் போது அதன் கொள்கை, கோட்பாடு என்ன என்பதைவிட உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உத்வேகமே முன்னிலையில் இருந்தது. புளொட்டில் இணைந்ததிலிருந்து GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) உடனான தொடர்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்தது.
(Dr. Rajasundaram - Ghandiyam, Vavuniya) (Kuddimani) (Thangadurai)
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்பட்டவர்களில் இவர்களும் அடங்குவர்
1983 யூலை இனஅழிப்பு நடவடிக்கையால் மக்கள் மத்தியில் அரசுக்கெதிரான வெறுப்புணர்வு அதன் உச்சநிலையை அடைந்திருந்தது. குறிப்பாக இளைஞர்கள் (யுவதிகளும் கூட) ஏதாவது ஒருவழியில் அரசுக்கெதிராகப் போராடவேண்டும் என்ற மனநிலை உடையவராகக் காணப்பட்டனர்.
தம்மை விடுதலை இயக்கங்களாகக் காட்டிக்கொண்ட எந்த இயக்கமும் (புளொட் உட்பட) இத்தகையதொரு சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பாவிக்கமுடியாத அளவுக்கு அரசியல் ரீதியிலும் (அமைப்புவடிவத்திலும் கூட), இராணுவரீதியிலும் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர் என்றே சொல்ல வேண்டும். இத்தகையதொரு சூழ்நிலையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த இந்திய அரசு மட்டுமே தயார் நிலையில் இருந்தது.
(ஜே.ஆர்.ஜெயவர்த்தனா)
இலங்கை அரசின் (ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசின்) முழுமையான மேற்கத்தைய சார்புநிலையை நீண்ட நாட்களாக உன்னிப்பாக அவதானித்து வந்திருந்த இந்திய அரசு, இத்தகையதோர் "கனிந்த" சூழலை இலங்கை அரசுக்கெதிராகப் பயன்படுத்த முடிவெடுத்தது.
(Indra Gandhi)
இந்திய அரசின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இயக்கத்தலைமைகளை அணுகி தாம் இராணுவப்பயிற்சியளித்து தருவதற்கு தயாராக இருப்பதாகவும் இளைஞர்களை இந்தியா அழைத்துவருமாறும் கேட்டுக் கொண்டனர். நான் அறிந்தவரை பெரும்பாலும் அனைத்து இயக்கங்களுமே – என்.எல்.எவ்.ரி(NLFT), தமிழ்மக்கள் பாதுகாப்புப் பேரவை தவிர- ஆட்சேர்ப்பில் இறங்கின. நாமும் எமது பங்குக்கு ஆட்சேர்ப்பில் இறங்கினோம்.
கடந்த காலங்களில் புளொட், காந்தீயம் போன்ற அமைப்புக்களில் செயற்பட்டவர்கள் உட்பட, புளொட்டுடன் எந்தவித தொடர்புகளுமே அற்றவர்கள் வரை (பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்) அனைத்து மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டனர். புளொட்டின் பெரும்பாலான வேலைகள், செயற்பாடுகள், அனைத்துமே யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு நகர்த்தப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் அரசபடைகளின் கெடுபிடிகள், வன்னிப்பகுதியில் காந்தீயம் மீதான குறிவைப்பு என்பனவும் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி செயற்பாடுகள் நகர்த்தப்பட்டமைக்கு ஒரு காரணமாகும்.
(கேதீஸ்வரன் )
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான சத்தியமூர்த்தி, கேதீஸ்வரன் போன்றோர் யாழ்ப்பாண பல்கலைக்கழக மட்டத்திலும் அதற்கு வெளியிலும் ஆற்றிய கடின உழைப்பு, புதிய அங்கத்தவர்களை இனங்கண்டு புளொட்டுக்குள் உள்வாங்கியமை போன்ற நடவடிக்கைகள் போன்றவை, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு செயற்பாடுகள் நகர்த்தப்பட்டமைக்கு மற்றொரு காரணமாகும்.
ஆனால் இத்தகையதொரு எதிர்பார்த்திராத வளர்ச்சியை – ஒரு வீக்கத்தை என்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.- கையாளும் நிலையில் புளொட்டின் முன்னணி அங்கத்தவர்களில் பெரும்பான்மையானோர் அரசியல் வளர்ச்சி பெற்றவர்களாகவோ அல்லது அநுபவ தேர்ச்சி பெற்றவர்களாகவோ இருக்கவில்லை என்பது மட்டுமல்ல சரியான, முறையான அமைப்புவடிவங்களும் கூட இருக்கவில்லை. இத்தகையதொரு நிலையை கையாள தயார் நிலையில் புளொட் இல்லாமல் இருந்ததால் பல்வேறு நெருக்கடிகளையும் முகம் கொடுக்க நேர்ந்தது. 1983 இல் ஏவிவிடப்பட்ட இனக்கலவரத்துக்கு பின்னான காலகட்டம் இதுவாகும்.
இதே காலப்பகுதியில் மட்டக்களப்பு சிறையுடைப்பில் இருந்து தப்பிவந்த போராளிகளும், இந்தச் சிறையுடைப்பு நடவடிக்கையுடன் தொடர்புபட்டு தேடப்பட்ட நபர்களும் என ( மட்டக்களப்பு வாசுதேவா, மாசிலாமணி உட்பட)
(மட்டக்களப்பு வாசுதேவா)
அவர்கள் குடும்பங்களுடன் யாழ்ப்பாணம் வந்தனர். ஏனைய மாவட்டங்களில் இருந்து வருபவர்களைத் தங்கவைத்தல், அவர்களுக்கான உணவு, இந்தியாவுக்கு கடல்மார்க்கமாக அனுப்பி வைத்தல் என்பன ஒருபுறமும், அரசியல் வகுப்புக்களை நடத்துவது, கிராமங்கள் தோறும் கூட்டங்களை ஒழுங்கு செய்வது, மக்களை அமைப்பாக்குவது என்பன மறுபுறமுமாக எம்மேல் அளவுக்கு மீறிய சுமைகள் ஏற்றப்பட்டதால், அனைவருமே கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அமைப்புக்கு வருபவர்களை இந்தியாவுக்கு அனுப்பிவைப்பதென்பது ஆரம்பகாலங்களில் பெரும் பிரச்சனைக்குரியதொன்றாக இருந்தது.
பெரும் எண்ணிக்கையானவர்கள் ஏனைய மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணம் வந்ததால் அவர்களை தங்கவைப்பதில் பல பிரச்சனைகளை முகம்கொடுக்க வேண்டியிருந்தது. புளொட்டிடம் ஒரு தூரவிசைப்படகு மட்டுமே அன்று இருந்தது. சுழிபுரம் பகுதியில் இருந்தே இந்தப்படகு இந்தியா சென்று வருவது வழக்கம். இதற்குப் பொறுப்பாக வதிரி சதீஸ் இருந்தார். ( சதீஸ் புளொட்டினால் பின்னர் படுகொலை செய்யப்பட்டார்). இந்தப்படகு கூட பல்வேறு காரணங்களால் ஒழுங்காக இந்தியா சென்று வருவதில்லை.
ஏனைய மாவட்டங்களில் இருந்து பயிற்சிக்கு செல்லத் தயாரானவர்களையும் இந்த ஒரு தூர விசைப்படகையும் வைத்துக் கொண்டு இந்தியா அனுப்புவதென்பது நடைமுறைச் சாத்தியமற்றதொன்றாக இருந்தது. இதனால் ஆரம்பகாலங்களில் தனிநபர்களின் படகுகளை வாடகைக்கு அமர்த்துதல், மீன்பிடிக்கும் றோலர்களை வாடகைக்கு அமர்த்துதல் மூலமாகவே பெருமளவானவர்கள் இந்தியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இத்தகைய செயற்பாடுகள் சுழிபுரம், மாதகல், இளவாலை, நெடுந்தீவு, மண்டைதீவு போன்ற பிரதேசங்களில் இருந்து இடம் பெற்றன. சுழிபுரம், மாதகல், இளவாலை, பிரதேசங்களில் இத்தகைய செயற்பாடுகளை குமரன் (பொன்னுத்துரை), இளவாலை போத்தார், மாதகல் ரவி ஆகியோர் கவனித்து வந்தனர். நெடுந்தீவு, மண்டைதீவு போன்ற இடங்களில் படகுப் போக்குவரத்து நடவடிக்கைளில் ஜீவன் தொடர்புகளை ஏற்படுத்தி தந்தார். பிற்பட்ட காலங்களில் மேலதிக படகுகளை புளொட் சொந்தமாக வாங்கிக் கொண்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான புளொட்டின் ஆரம்பகால கடல்போக்குவரத்தென்பது மிகவும் சிக்கலானதொன்றாகவும், பல கஸ்டங்களையும் நெருக்கடிகளையும் கடந்தாக வேண்டியதொன்றாகவும் இருந்ததென்பதே உண்மை.

29/04/2011
(தொடரும்)


 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1